Monday, 11 June 2018

My Reading List | என் வாசிப்புப் பட்டியல் - Ki.Mu Ki.Pi | கி.மு கி.பி

கி.மு கி.பி | Ki.Mu Ki.Pi           
 -மதன் (Madhan)





பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன் குமுதத்தில் கி.மு கி.பி என்ற தலைப்பில் எழுதிய வரலாற்று தொடரின் தொகுப்பே இந்த புத்தகம். கி.மு கி.பி என்ற தலைப்பில் இருந்தாலும் கி.மு காலகட்டத்தை மட்டுமே விவரிக்கிறது இந்த புத்தகம். 450 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி வெறும் 7927 மைல் விட்டமுள்ள ஒரு மிதக்கும் பாறை என்ற தகவலில் தொடங்கி கிறிஸ்து பிறப்பு வரை பல ஆச்சரியமூட்டும் தகவல்களை இந்த புத்தகத்தில் காணலாம்.
முதல் ஆதிமனிதன் ஒரு பெண். அவள் ஆப்ரிக்க கருப்பு பெண் என்ற விஞ்ஞான பூர்வமாக நிருபிக்கப்பட்ட தகவல் நமக்கு ஆச்சரியமூட்டுகிறது. மேலும், முதல் ஊரின் பெயரே "ஊர்" என்பது மற்றொரு ஆச்சரியம். நாடோடி மனிதர்கள் நதிக்கரையோரம் வசித்த மக்கள் மீது தொடுத்த தாக்குதலே முதல் யுத்தம் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
யூப்ரேடீஸ் நதிக்கரையில் மலர்ந்த மெசோபேடாமிய நாகரிகத்தை சார்ந்த  பாபிலோனியர்கள் சிற்ப கலையில் சிறந்து விளங்கியது போல முதன் முதலில் உலகில் தெளிவான சட்டங்கள் பிறந்ததும் அங்குத்தான் .
2000 கடவுள்களுக்கு மேல் இருந்த எகிப்து சாம்ராஜயத்தில் ஒரே கடவுள் என்று முதலில் முழங்கிய மன்னன் அக்நேடா, சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இறந்த உடலை பதப்படுத்தும்(மம்மி) முறையில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர் எகிப்தியர்கள் என்ற தகவல்கள் நமக்கு வியப்பூட்டுகின்றன.
இலக்கியம், நாடகம் போன்ற கலைகளில் சிறந்து உலகுக்கு முன்னோடியாய் திகழ்ந்த கிரேக்க நாகரிகம் போரிலும் சிறந்து விளங்கியது. தன்னைவிட நான்கு மடங்கு பெரிய படையான பாரசீக படையை எதிர்த்த போதும் தன் போர் நுணுக்கத்தாலும் புத்திசாலித்தனத்தாலும் வென்றது.
அவர்களின் போர் வரலாற்றை படிக்கும் போது "300" என்கிற ஆங்கில படத்தைப் பார்க்கும் போது  ஏற்பட்ட சிலிர்ப்பும்  வியப்பும் மறுமுறை நமக்கு  ஏற்படுகிறது . நவின மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேட்டீஸ், தத்துவ மேதைககளான சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்களை தந்தது கிரேக்க சாம்ராஜ்ஜியம்.
இன்றைய கேரள தமிழக பகுதிகளை தவிர்த்து  அகந்த பாரதத்தின் மன்னனாய் திகழ்ந்த சந்திரா குப்த மௌரியர் வரலாற்றையும் ஆசிரியர் விறுவிறுப்போடு சொல்லியிருக்கிறார்.
உலகில் தோன்றிய நாகரிகங்களில் சிந்து நாகரிகம் போன்று எளிமையான, ஒழுக்கம் நிறைந்த  நாகரிகம் எதுவும் இல்லை என்று கூறலாம்.  நீச்சல் குளம், கழிவறை என அன்றே நாகரிகத்திற்கு எல்லாம் நாகரிகமாக திகழ்ந்துள்ளது. பல படையெடுப்புகள் நடந்தபோதும், பல கலாசாரங்கள் இடையில் நுழைந்தபோதும், திணித்தபோதும்  அவற்றுடன் இரண்டறக் கலந்து ஒரு தொடர் கலாசாரமாக இந்தியா விளங்குவதற்கு சிந்து நாகரிகத்தின் வலிமையும் தொன்மையுமே காரணம் என்று ஆசிரியர் குறிப்பிடுவது ஏற்புடையதே.!
வரலாற்றை படிக்கவும் கேட்கவும் அலுப்பு என்று எண்ணுபவர்களுக்குக் கூட மிக எளிமையாக, உரையாடலை போல் இந்த புத்தகத்தை கொடுத்துள்ளார் ஆசிரியர்.


புருஷோத்தமன் ராமச்சந்திரன்  
Purushothaman Ramachandran